கொடி கம்பங்கள் அகற்றும் விவகாரம் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்
கொடி கம்பங்கள் அகற்றும் விவகாரம் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்
ADDED : ஜூலை 17, 2025 12:23 AM
சென்னை:'கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரம் தொடர்பான வழக்கை, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் கதிரவன், சித்தன் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மாவட்டத்தில் இரு இடங்களில் அ.தி.மு.க., கொடி கம்பங்களை அமைக்க அனுமதி வழங்க உத்தரவிட கோரி, வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தமிழகம் முழுதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. இந்த வழக்கில், தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, 'சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி எஸ்.எஸ்.சவுந்தர், நீதிபதி ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்கும்' என, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.