பரமாச்சாரியார் பரிந்துரைத்த மூன்று அம்சத் திட்டம்: முடித்துக் கொடுத்து அசத்திய எம்ஜிஆர்
பரமாச்சாரியார் பரிந்துரைத்த மூன்று அம்சத் திட்டம்: முடித்துக் கொடுத்து அசத்திய எம்ஜிஆர்
UPDATED : ஜன 16, 2024 04:34 PM
ADDED : ஜன 16, 2024 10:41 AM

'எம்ஜிஆரை சந்திக்க வேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் வேண்டுகோள் எம்ஜிஆரின் செவிகளை எட்டியது. துறவியுடன் உறவாடல் என்பது எம்ஜிஆருக்கும் மனமொருமித்த குணமாகும்.
ஒரு நாள் திடீரென்று அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பயணித்த கார், காஞ்சி மட வாசலில் நின்றது. காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், மெதுவாக மடத்தில் உள்ளே நுழைந்தார். பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மடத்துப் பொறுப்பாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வந்து எம்ஜிஆருக்கு வணக்கம் செலுத்தினர். 'பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்திக்க வேண்டும்' என்று எம்ஜிஆர் அவர்களிடம் கேட்டார். அருகில் உள்ள குடிலில் பரமாச்சாரியார் அமர்ந்திருப்பதாக எம்ஜிஆருக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கே செல்வதானால் நடந்துதான் போயாக வேண்டும். சந்துக்குள்ளே கார் நுழைவதற்கான வசதி வாய்ப்புகள் கிடையாது. இந்த தகவலும் எம்ஜிஆருக்கு விவரிக்கப்பட்டது. அடுத்த நிமிடம் எம்ஜிஆர் நடக்கத் தொடங்கினார். குடிலுக்குள் நுழைந்தார்.
பரமாச்சாரியாரைச் சந்தித்தப் பரம திருப்தியில் பவ்வியமாக வணங்கினார் எம்ஜிஆர். அவருக்கு ஆத்மார்த்தமான ஆசி வழங்கிய பரமாச்சாரியார், அமர்த்திப் பேசினார். இருவருக்கும் இடையே பரஸ்பரம் பல உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்போது எம்ஜிஆரிடம் பரமாச்சாரியார் மூன்று அம்சத் திட்டத்தைப் பரிந்துரைத்தார். கருத்தூன்றிக் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'இதனை முடித்து வைப்பது என் தார்மீகக் கடமை' என்றார்.
அவை எவை?
1.உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும்.2.மாநிலமெங்கும் மரக்கன்றுகளை நட வேண்டும்.3.சைக்கிளில் டபுள்ஸ் சென்றால் தண்டிக்கக் கூடாது.
இவற்றைச் செயலாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே எம்ஜிஆருக்கும் இருந்திருக்கிறது. 'great men think alike' என்பது ஆங்கிலப் பழமொழி அல்லவா? எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்த மூன்று அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டன.
துறவியின் தொண்டால் மாநாட்டைக் கண்டது மதுரை. மாநிலமெங்கும் மரக்கன்றுகள் மலர்ந்தன. இருவரை ஏந்திக்கொண்டு சைக்கிள் சவாரிகள் மிளிர்ந்தன.எம்ஜிஆர் பிறந்த நாளில், அவர் பரமாச்சாரியாரின் பரிந்துரைக்குச் செய்த பங்களிப்பை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.
- ஆர்.நூருல்லா,
ஊடகவியலாளர்
9655578786