ADDED : மே 12, 2025 11:39 PM

திருப்பூர் : கட்டுமான பொருட்கள் விலை, ஒன்றரை ஆண்டுகளில், யூனிட்டுக்கு, 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் பேச்சில் ஒப்புக்கொண்டபடி, விலையை குறைக்காததால், தமிழ்நாடு, பாண்டிச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது.
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி, மாநில அளவிலான ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
விலை உயர்வை ரத்து செய்து, அரசே கல் குவாரிகளை நடத்த வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும்; விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை பக்கெட்டில் எடுத்து வந்து, மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி, நுாதன முறையில் போராடினர்.