சென்னையை உலுக்கிய பீஹார் மாநில பெண் கொலையில் திருப்பம்; பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
சென்னையை உலுக்கிய பீஹார் மாநில பெண் கொலையில் திருப்பம்; பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
ADDED : ஜன 31, 2026 10:33 PM

சென்னை: சென்னையில், பீஹார் குடும்பத்தினர் கொல்லப்பட்ட வழக்கில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், தலையில் இரும்பு கம்பியால் அடித்ததே இறப்புக்கு காரணம் என்றும், முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீஹார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், 24. தன் மனைவி முனிதா குமாரி, 20 மற்றும் 2 வயது மகன் பிர்மானி குமார் ஆகியோருடன் வேலை தேடி, குடும்பத்துடன் சென்னை வந்தார்.
கடந்த மாதம் 26ம் தேதி, அடையாறு இந்திரா நகர் பகுதியில், சாக்கு மூட்டையில் ரத்தக் காயங்களுடன் கவுரவ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக, அடையாறு போலீசார் விசாரணை நடத்தி, அதே மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் என்ற சத்யேந்தர், 30, லலித் யாதவ், 40 மற்றும் விகாஷ் குமார், 24 ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கவுரவ் குமாரை மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையையும் கொலை செய்து, உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.
குழந்தையின் உடல், மத்திய கைலாஷ் ரயில்வே பாலம் அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. முனிதா குமாரியின் உடல், பெருங்குடி குப்பை மேட்டில் இருந்து, மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும், முனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால் அவரையும், தடுக்க வந்த கணவர் மற்றும் அழுத குழந்தையையும் அடித்து கொன்றதாக, போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
இதற்கிடையே, முனிதா குமாரியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உதவி பேராசிரியர்கள் சிவகுமார் மற்றும் ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், முனிதா குமாரி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும், பாலியல் துன்புறுத்தலுக்கான தடயங்கள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தலையில் இரும்பு கம்பியால் பலமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயமே, அவரது உயிரிழப்புக்கு முதன்மைக் காரணம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

