ADDED : ஏப் 21, 2024 05:30 AM

'என் மண்; என் மக்கள்' என்ற தலைப்பில் நடை பயணம் நடத்தி, தமிழகத்தின், 234 தொகுதிகளையும் ஒரு ரவுண்ட் வந்தார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. இந்த பாத யாத்திரைக்கு, மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. இதனால் பா.ஜ.,விற்கு ஏதாவது பலன் உண்டா என்பது, ஜூன் 4ல் தெரியவரும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர், அண்ணாமலையின் நடை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்அடைந்தனர்.
இதையடுத்து, அண்ணாமலையின் அடுத்த நடை பயணத்திற்கு கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாம். தமிழகத்தின் தென் மாவட்டங்களை குறி வைத்து, இந்த பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக, மீனவர்கள் அதிகம் வசிக்கும், 10 தென் மாவட்டங்களில் இந்த நடை பயணம் இருக்கும். 'விரைவில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை மீட்கப்படும்' என்பது தான், நடை பயணத்தின் கோஷம் மற்றும் குறிக்கோள்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளது. அதற்கு முன், இந்த நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொள்வார் என்கின்றனர். 'கச்சத்தீவை தி.மு.க.,வும், காங்கிரசும் இலங்கைக்கு துாக்கி கொடுத்து விட்டனர்' என்பதற்கான ஆதாரங்களை, பா.ஜ., வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை சட்டசபை தேர்தலில் பெரிதாக்க பா.ஜ., முடிவெடுத்துள்ளதாம்.

