சுவீடனில் இருந்து குடும்பத்தை தேடி மைசூரு வந்த பெண்
சுவீடனில் இருந்து குடும்பத்தை தேடி மைசூரு வந்த பெண்
ADDED : பிப் 18, 2024 05:30 AM

மைசூரு : சுவீடனில் இருந்து தன் குடும்பத்தைத் தேடி மைசூரு வந்த பெண், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் வேதனையில் கண்ணீர் விட்டு அழுதார்.
மைசூரு மாவட்ட பத்திரிகையாளர் பவனில் நேற்று சுவீடனில் இருந்து வந்த ஜானு என்கிற சாண்ட்பெர்க் அளித்த பேட்டி:
நான் கர்நாடகாவைச் சேர்ந்தவள். 1989ல் எனக்கு 8 வயதாக இருந்தபோது, பெங்களூரில் உள்ள ஆஸ்ரியா குழந்தைகள் ஹோமில் இருந்து என்னை ஒரு வெளிநாட்டு தம்பதி தத்தெடுத்து, சுவீடனுக்கு அழைத்துச் சென்றனர்.
என் கல்வியை அங்கேயே முடித்தேன். ஆனால், நான் எப்போதும், என் குடும்பத்தை நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் எப்படி செல்வது என்று தெரியவில்லை.
பல இடங்களில் தேடியபோது, நான், மைசூரு மாவட்டத்தில் பிறந்த தகவல் எனக்கு கிடைத்தது. என் தாய் மத்துாரைச் சேர்ந்த வசந்தம்மா.
என் தந்தை தற்கொலை செய்து கொண்டதால், என்னை வளர்க்க முடியாமல், பாட்டியிடம் விட்டுச் சென்றார். என் பாட்டியோ, ஜெயம்மா என்பவரிடம் கொடுத்தார். அவர், என்னை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த தகவல் கிடைத்தது.
மத்துாருக்கு சென்று விசாரித்தபோது, மத்துார் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் வீட்டில் ஜெயம்மா வசித்து வந்ததும், அவர் இறந்ததும் தெரியவந்தது. இதனால் என் தம்பி, தங்கையை தேடி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகக் கூறிய அவர் கண்ணீர் விட்டு அழுதார்.