ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜன. , 12க்கு பின் ஆதார் இணைப்பு கட்டாயம்
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜன. , 12க்கு பின் ஆதார் இணைப்பு கட்டாயம்
ADDED : டிச 20, 2025 06:33 AM

சென்னை: 'ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஜன., 12க்கு பின், ஆதார் எண் இணைப்பு கட்டாயம்' என, ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர், 'டிக்கெட்' முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, ஆதார் அட்டை இணைப்பை, ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது.
இதையடுத்து, மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பு படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. அதன்படி, நேற்று முதல் காலை 8:00 மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை, ஜன., 5ம் தேதிக்கு பின், காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை, 'டிக்கெட்' எடுக்க ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது .
இதுவே, ஜன., 12ம் தேதிக்கு பின், 'ஆன்லைனில்' ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், ஆதார் எண் இணைப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என, ரயில்வே தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
உண்மையான பயனாளர்களுக்கு, ரயில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி., - ஐ.டி.,யுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு பொருந்தாது என, ரயில்வே தெரிவித்துள்ளது. இது, வரவேற்கத்தக்கது.
அதேநேரம், ஆதார் எண்ணை இணைக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை, ரயில்வே நிர்வாகம் உடனடி யாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

