ADDED : ஆக 03, 2011 06:38 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாணம் பதினொன்றாம் நாள் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் காலபூஜைகள் நடைபெற்றது. காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளிகமல வாகனத்தில் தபசு கோலத்தில் ராமதீர்த்தம் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். 11 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பிற்பகல் 2.40க்கு சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. மாலை மாற்றும் வைபவத்தை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை 6 மணி முதல் கோயில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் தீர்த்தமாடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.