அழகிரிக்கு எஸ்.ஆர்.கோபி கடிதம் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியதா?
அழகிரிக்கு எஸ்.ஆர்.கோபி கடிதம் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியதா?
ADDED : ஜூலை 24, 2011 04:32 AM
மதுரை : மதுரையில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், மத்திய அமைச்சர் அழகிரிக்கு, கோபி எழுதிய கடிதம் சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
நில மோசடி வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை 20ல், மதுரை அவனியாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.
கோபி வீடு மற்றும் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான சொத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அழகிரிக்கு, கோபி, 2008ல் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியதாகவும், அதை ஆதாரமாகக் கொண்டு, கோபி மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தா.கிருட்டிணன் கொலை வழக்கில், கோபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: கோபியின் இரண்டு வீடுகளில் போலீசார் சோதனை செய்யும்போது, நான் (ராமச்சந்திரன்) மற்றும் வழக்கறிஞர்கள், கோபி மனைவி, வி.ஏ.ஓ., உடனிருந்தோம். சோதனைக்கு பின், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அத்தாட்சி சான்றுகளை போலீசார் வழங்கினர். அதில், அழகிரிக்கு, கோபி எழுதியதாக கடிதம் எதுவும் போலீசார் கைப்பற்றவில்லை. சில பத்திரிகைகளில் (தினமலர் இதழில் அல்ல) கடிதம் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி உள்ளது. கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தால், எங்கிருந்து கைப்பற்றினர். யார் மூலம் கைப்பற்றினர் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.