சீமான் கட்சி பிரசாரத்துக்கு 'ஆப்பு' வைக்கும் 'ஆப்'
சீமான் கட்சி பிரசாரத்துக்கு 'ஆப்பு' வைக்கும் 'ஆப்'
ADDED : ஜன 22, 2025 04:47 AM

ஈரோடு: இடைத்தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் ஆணைய செயலி (ஆப்), தங்களுக்கு 'ஆப்பு' வைப்பதாக, நாம் தமிழர் கட்சியினர் புலம்புகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்தின் 'சுவிதா' என்ற செயலியில் விண்ணப்பித்தால், அனுமதி கிடைக்காமல் ரத்தாவதாக, சீதாலட்சுமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
'தனது மனுவை வேண்டுமென்றே தேர்தல் ஆணைய அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாகவும், அதேநேரம் தி.மு.க.,வினர் பிரசாரத்துக்கு பல இடங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது' என்றும், அக்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி மாவட்ட தேர்தர் அலுவலரான கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, ''பிரசாரத்துக்கான நேரம் ஒதுக்குவதை தேர்தல் ஆணையத்தின் 'சுவிதா' என்ற செயலியில் வேட்பாளர்கள் தரப்பில் விண்ணப்பிக்கின்றனர். இதில் யார் தலையீடும் இருக்காது.
''இதை கண்காணிக்க தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மேல், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளனர்,'' என்றார்.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: பிரசாரம், பொதுக்கூட்டம், அரங்க கூட்டம் என எதுவாக இருந்தாலும், 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
வேட்பாளர், அவரது தலைமை முகவர் பெயரில், எந்த இடம், எந்நேரம் முதல் எந்நேரம் வரை, எந்தெந்த பகுதி, எத்தனை நபர்கள் உடன் வருவார்கள் என்ற விபரத்தை 'சுவிதா' செயலியில் விண்ணப்பித்தால் உடன் ஏற்கப்படும். முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
விண்ணப்பத்துடன் பிரசாரத்துக்கு செல்லும் தொடர்புடைய பகுதி போலீஸ் ஸ்டேஷனின் அனுமதி கடிதம் இணைக்க வேண்டும். இந்நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களால் செயல்படுத்துவதல்ல.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தரப்பில், 300க்கும் மேற்பட்ட முறை ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அதில் முறையான விபரம் இல்லாததால் விண்ணப்பம் தள்ளுபடியாகிறது. அதிகாரி தலையிட்டு, அனுமதி வழங்கவோ, ரத்து செய்யவோ இயலாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.