ADDED : ஜன 29, 2025 11:58 PM
'வேங்கைவயல் கிராமத்தில் போராடி வரும் மக்கள் மீது, போலீசாரின் கெடுபிடியை கைவிட வேண்டும்' என, திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் தான் குற்றவாளி என, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக மாற்றுவதை ஏற்க முடியாது' என, அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேங்கைவயல் கிராமத்தில், மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களை அங்கே சென்று சந்திப்பதற்கு, போலீசார் கெடுபிடிகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் இந்த கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதுகுறித்து, தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

