பொறுப்பு டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பதவியேற்பு
பொறுப்பு டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பதவியேற்பு
ADDED : டிச 12, 2025 05:13 AM

சென்னை: காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்.
தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக, வெங்கடராமன் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு, கடந்த 9ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருப்பதால், 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
இதனால், அவர் கவனித்து வந்த காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி., பணியை, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் கூடுதலாக கவனிப்பார் என, அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இதையடுத்து, 2026 ஜன., 3ம் தேதி அபய்குமார் சிங் ஓய்வு பெற உள்ள நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று காலை 10:30 மணியளவில் அவர் பொறுப்பேற்றார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 1993ல், தமிழக காவல் துறையில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியை துவக்கினார்.
தெற்கு மண்டல ஐ.ஜி., மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., சென்னை மாநகர போலீசில் கூடுதல் கமிஷனர், திருநெல்வேலி கமிஷனர் என, பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளார்.

