ADDED : நவ 21, 2025 02:41 AM
அரூர், அரூரில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தலைமறைவான கணவனை, போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் பூந்திமஹால் தெருவை சேர்ந்தவர் மகா, 29. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜோதிஅலகனுாரை சேர்ந்தவர் வெங்கடேசன், 32. இருவருக்கும் கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. தம்பதிக்கு நிதிஷ், 8, சாய்ஸ்ரீ, 5, என, 2 குழந்தைகள். தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் மகா கடந்த, 4 மாதங்களுக்கு முன், கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் அரூரிலுள்ள தன் தாய் பூங்கொடி வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த, 15ம் தேதி அரூர் வந்த வெங்கடேசன், மனைவி மற்றும் குழந்தைகளை
அழைத்துக் கொண்டு திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு கடந்த, 17ம் தேதி காலை, 7:00 மணிக்கு அரூரிலுள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, தன்னுடன் ஊருக்கு வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவி மகாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அரூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், பர்கூரில் பதுங்கியிருந்த வெங்கடேசனை, நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்து, அரூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

