'ரோல்கால்' பணி ஏற்பு அணிவகுப்பில் பங்கேற்காத போலீசாருக்கு 'ஆப்சென்ட்' அதிகாரிகள் உத்தரவு
'ரோல்கால்' பணி ஏற்பு அணிவகுப்பில் பங்கேற்காத போலீசாருக்கு 'ஆப்சென்ட்' அதிகாரிகள் உத்தரவு
ADDED : ஜூன் 01, 2026 06:24 AM
சென்னை: 'தினமும், 'ரோல்கால்' என்ற, பணி ஏற்பு அணிவகுப்பில் பங்கேற்காத போலீசாருக்கு, அன்றைய தினம், 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சீருடை பணியாளர்களான போலீசார், தினமும் முகச்சவரம் செய்ய வேண்டும். சிகை அலங்காரம் எப்படி செய்து கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் உள்ளன.
அவர்கள் தினமும் பணி ஏற்புக்கு முன்பும், பணி முடித்த பின்னரும், 'ரோல்கால்' எனும் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.
இந்த அணிவகுப்பு, காலை, மதியம், மாலை என, மூன்று வேளையும் நடத்தப்படும். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், ரோல்கால் அணிவகுப்பிற்கு தலைமை தாங்குவர்.
ஆண் போலீசார், தினமும் ரோல்கால் அணிவகுப்பிற்கு காலை, 7:00 மணிக்கும், பெண் போலீசார் காலை, 8:00 மணிக்கும் வர வேண்டும். பெரும்பாலான போலீசார் குறித்த நேரத்திற்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், ரோல்கால் அணிவகுப்பில் பங்கேற்காததற்கு, அவசியமற்ற காரணங்களையும் கூறி வருகின்றனர். மதியம் மற்றும் மாலை நேர அணிவகுப்பில் போலீசார் பங்கேற்பது இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், மாநிலம் முழுதும் உள்ள, கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், 'ரோல்கால் அணிவகுப்பில் பங்கேற்காத போலீசாருக்கு, அன்றைய தினம், 'ஆப்சென்ட்' போட வேண்டும்.
'மேலும், ரோல்கால் அணிவகுப்பில், போலீஸ் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை படித்து காட்டி, போலீசாரிடம் ஒப்புதல் பெற்று, உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
