என்னை கொலை செய்ய சதி: மராத்தா தலைவர் குற்றச்சாட்டு
என்னை கொலை செய்ய சதி: மராத்தா தலைவர் குற்றச்சாட்டு
UPDATED : பிப் 27, 2024 10:24 AM
ADDED : பிப் 26, 2024 05:35 AM

மும்பை : ''என்னை கொலை செய்ய, மஹாராஷ்டிரா துணை முதல்வர் பட்னவிஸ் திட்டமிட்டுள்ளார்,'' என, மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி வரும் மனோஜ் ஜரங்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இதனால், மும்பையில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவின்படி, மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஜரங்கே அறிவித்தார்.
இந்நிலையில் ஜரங்கே, தன் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் மீது சிலர் அவதுாறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதற்கு பின்னணியில் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளார். அவர், என்னை கொலை செய்ய சதி செய்கிறார். இதை கண்டித்து, மும்பையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யவே, சட்டசபையில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மராத்தா இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

