சீட்டு நிறுவனங்களை ஆய்வு செய்யாத மாவட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை
சீட்டு நிறுவனங்களை ஆய்வு செய்யாத மாவட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை
ADDED : டிச 03, 2025 06:47 AM

சென்னை: பதிவு செய்யாத திட்டங்களை, சீட்டு நிறுவனங்கள் செயல்படுத்துவதை ஆய்வு செய்து, அபராதம் விதிக்காத மாவட்ட பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், சீட்டு திட்டங்கள் செயல்படுத்தும் நிறுவனங்கள், அந்தந்த பகுதிக்கான மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது, ஒவ்வொரு சீட்டு திட்டத்துக்கும், அதன் மொத்த மதிப்பில் குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட சீட்டு திட்டம் பிரச்னையின்றி முடிந்த பின், இத்தொகை திரும்ப கிடைக்கும்.
இதில், வைப்பு தொகை செலுத்தும் செலவை தவிர்க்கும் நோக்கில், சீட்டு நிறுவனங்கள், சில திட்டங்களை பதிவு செய்யாமல் நடத்துகின்றன. நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட சீட்டு திட்டம் பதிவு செய்யப்படாமல் இருக்கும். இது தெரியாமல், மக்கள் அதில் பணம் செலுத்தி பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
எனவே, மாவட்ட பதிவாளர்கள், தங்களின் நிர்வாக எல்லைக்குள் வரும் சீட்டு நிறுவனங்கள், பதிவில்லாத திட்டங்களை செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதற்காக, அந்த நிறுவன அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் .
ஆனால், பெரும்பாலான மாவட்ட பதிவாளர்கள், சீட்டு நிறுவனங்களை ஆய்வு செய்ய செல்வதே இல்லை என, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், பதிவு செய்யாத திட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 2,712 சீட்டு நிறுவனங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, கோவையில், 728; திருநெல்வேலியில், 580; சென்னையில், 320 சீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சீட்டு திட்டங்கள் பதிவு வாயிலாக, ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. பதிவு செய்யாமல் நடத்தப்படும் சீட்டு திட்டங்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கள ஆய்வுக்கு செல்லாத மாவட்ட பதிவாளர்கள் குறித்து, கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

