பொறுப்பற்ற கருத்து: முன்னாள் நீதிபதிகளின் அணுகுமுறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி
பொறுப்பற்ற கருத்து: முன்னாள் நீதிபதிகளின் அணுகுமுறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி
UPDATED : ஜூலை 29, 2025 07:56 AM
ADDED : ஜூலை 29, 2025 07:37 AM

மதுரை: வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு பரிந்துரைத்தது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலை இணை பேராசிரியர் பழனிவேலு நியமனம் தொடர்பான ஒரு வழக்கில், ஜூலை 24ல் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் கடமைகளை நிறைவேற்றும் போது, ஜாதி, சமூக பாகுபாடு காட்டுகிறார் என, அவதுாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இவ்வழக்கில் எதிர்மனுதாரரான பழனிவேலு சார்பில் ஆஜராகி வாதிட வாஞ்சிநாதன் வக்காலத்து தாக்கல் செய்திருந்தார். அவர் ஆஜராகி, 'பழனிவேலுவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் நானல்ல. அவருக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பிவிட்டேன்' என்றார்.நீதிபதி சுவாமிநாதன் கடமைகளை நிறைவேற்றும் போது ஜாதி பாகுபாட்டை வெளிப்படுத்துகிறார் என்பதை பற்றிய தன் நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறாரா என, கேள்வி எழுப்பப்பட்டது. வாஞ்சிநாதன் நேரடியாக பதிலளிக்கவில்லை.
அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார். அவரது செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அவர் ஜூலை 28ல் ஆஜராகி நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு நேற்று விசாரித்தது. வாஞ்சிநாதன் ஆஜரானார். வாஞ்சிநாதன் சமூகவலைத்தளத்தில் அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை காண்பித்து, அதன் தலைப்பை படித்து கருத்து தெரிவிக்குமாறு நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.
வாஞ்சிநாதன், 'இது வழக்கிற்கு தொடர்பில்லாதது. வீடியோவை பார்த்து முடிவெடுக்க முடியாது. வீடியோவிலுள்ள தலைப்பிற்கு நான் பொறுப்பில்லை' என்றார்.
நீதிபதி, 'தீர்ப்பை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு ஆதரவளிக்கிறேன். ஜாதிய பாகுபாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. அது குறித்த நிலைப்பாடு என்ன?' என, கேள்வி எழுப்பினார்.
வாஞ்சிநாதன், 'எப்போது, எங்கு பேசினேன் என்பதற்கு எழுத்துப்பூர்வமாக கேள்விகளை முன்வைக்கவில்லை. அதற்குரிய ஆவணமும் வழங்கவில்லை. வீடியோக்கள் வெட்டி, ஒட்டப்பட்டிருக்கலாம். உங்களுக்கு எதிரானதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான இவ்வழக்கை நீங்களே விசாரிப்பது ஏற்புடையதல்ல' என்றார்.
நீதிபதி, 'கொடூரமான குற்றச்சாட்டு எதன் அடிப்படையில் நீதிமன்றம் மீது சுமத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தான் தெரிவித்தோம்' என, விவாதம் நடந்தது.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுவரை நாங்கள் வாஞ்சிநாதனுக்கு எதிராக எந்த அவமதிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அவர் சுவாமிநாதனை அவதுாறாக பேசி வருகிறார் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அவர் முன்னிலையில், அவரது நேர்காணல்களில் ஒன்றான 'ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாதி பாசம்' என்ற தலைப்பில் வீடியோ பதிவு நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அதில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அமர்வு நடவடிக்கைகளை பற்றி வாஞ்சிநாதன் குறிப்பிடுகையில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஒரு பிராமணர் என்பதால் காப்பாற்றப்பட்டார். மூத்த வழக்கறிஞர் வில்சன் பிராமணர் அல்ல என்பதால் குறிவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதே நேர்காணலில், மத சார்பு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த நேர்காணல் ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோன்ற ஏராளமான யூ டியூப் வீடியோக்கள் உள்ளன. சமூக ஊடகங்களில் வாஞ்சிநாதன் மேற்கொண்ட இத்தகைய அவதுாறான பிரசாரத்தின் காரணமாகவே தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதற்கு முன்பே இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்க நாங்கள் விரும்பினோம். வாஞ்சிநாதன் தனது மனதை மாற்றிக்கொண்டால், இவ்வழக்கை முடித்து வைப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது.
வாஞ்சிநாதனுக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. ஆனால், அவருக்கு புத்திசாலித்தனமாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் முன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மறுத்துவிட்டார். முன்னர் எழுப்பிய கேள்விக்கு அவரது எழுத்துப்பூர்வ பதில் முற்றிலும் அமைதியாக உள்ளது.
இந்நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ அவதுாறை மீண்டும் கூறினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அவர் அறிந்திருக்கலாம். இது அவரது தைரியத்தை பறைசாற்றுகிறது.
தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர் தனது அறிக்கையில் உறுதியாக நிற்க வேண்டும். விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அவர் தவிர்க்கக்கூடாது.வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவைத் திரட்டி வாஞ்சிநாதன் தன்னை மீட்க விரைந்துள்ளார். இந்நீதிமன்ற முடிவிற்காக காத்திருக்காமல் அவர்கள் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.
பொருத்தமற்ற செயல்பாடு காரணமாக வாஞ்சிநாதன் வழக்கறிஞராக தொழில் செய்ய இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்ட பிறகு அவர் தன் செயலை மேம்படுத்திக் கொள்வார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார்.
அவர், 'இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க முடியும்,' என பதில் மனு சமர்ப்பித்துள்ளார். இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு மாற்றுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

