துாத்துக்குடி கூலிப்படை கும்பலின் தலைவன் ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப்பிடித்த போலீஸ் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
துாத்துக்குடி கூலிப்படை கும்பலின் தலைவன் ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப்பிடித்த போலீஸ் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
ADDED : மார் 22, 2025 06:27 AM

சென்னை: சென்னை கிண்டியில், போலீசார் மீது கற்களை வீசி தப்பிக்க முயன்ற, துாத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ஐகோர்ட் மகாராஜாவை, துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
தென்சென்னையில் உள்ள நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி, கொலை செய்ய, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் களமிறங்கி இருப்பதாக, கடந்த 15ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை முழுதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
வாக்குமூலம்
சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலையில், தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார், கூலிப்படையைச் சேர்ந்த, துாத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த வினோத், 27; சென்னை மணலியைச் சேர்ந்த பாலமுருகன்,23; மாதவரம் சுரேஷ்,35 ஆகியோரை கைது செய்தனர்.
மூவரும் அளித்த வாக்குமூலத்தின்படி, நகைக்கடை அதிபர் மகனை கடத்தி, கொலை செய்யும் திட்டத்தில், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ஐகோர்ட் மகாராஜா,31 என்பவர் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், ஐகோர்ட் மகாராஜாவை தேடி வந்தனர்.
இரு தினங்களுக்கு முன், அவரது கூட்டாளி கார்த்தி என்பவர் சிக்கினார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னையில் பதுங்கி இருந்த ஐகோர்ட் மகாராஜா, நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே, கை துப்பாக்கி, முகமூடி, கத்தி உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன், அவரை, நேற்று காலை, 4:15 மணியளவில் அந்த இடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது, கை துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருவது போல நடித்த ஐகோர்ட் மகாராஜா, 'நான் ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்து தப்பியவன். என்னையே பிடிக்க பார்க்கிறீர்களா' என, மிரட்டல் விடுத்தபடி, போலீசார் மீது கற்களை வீசியுள்ளார். தன்னிடம் இருந்த துப்பாக்கியாலும் சுட முயன்றுள்ளார்.
அப்போது, தனிப்படை எஸ்.ஐ., பாலமுருகன், தற்காப்புக்காக கூலிப்படை கும்பல் தலைவனின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டுள்ளார்.
இதனால், ஓட முடியாமல் சுருண்டு விழுந்த மகாராஜாவை பிடித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
யார் இந்த மகாராஜா?
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தில் சுடலைமாடன் சுவாமி கோவில் உள்ளது. இந்த சுவாமி, அப்பகுதி மக்களால் ஐகோர்ட் மகாராஜா என, அழைக்கப்படுகிறார். இப்பெயரே, கூலிப்படை கும்பல் தலைவனுக்கும் பெற்றோர் சூட்டி உள்ளனர்.
தென் மாவட்ட ரவுடியாக உருவெடுத்த ஐகோர்ட் மகாராஜா, 2017ல், காதலி முத்துமாரியை கொலை செய்துள்ளார். பெரிய அளவில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி வசூலிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்தாண்டு, மார்ச் மாதம், துாத்துக்குடி மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்த, போலீசார் அழைத்துச் சென்றபோது, மிளகாய் பொடியை துாவிவிட்டு தப்பினார்.
ஐகோர்ட் மகாராஜாவுக்கு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்ற கள்ளக்காதலி இருந்தார். இந்த சூர்யாவின் கணவர், குஜராத் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஐகோர்ட் மகாராஜாவை பயன்படுத்தி, சூர்யா, ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில், கடந்தாண்டு மதுரையில், 14 வயது மாணவனை கடத்தி, அவரின் தாயிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இந்த வழக்கில், கடந்தாண்டு ஜூலையில், ஐகோர்ட் மகாராஜா உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ஜாமினில் வெளி வந்த பின், ஐகோர்ட் மகாராஜா தலைமையிலான கூலிப்படை கும்பல், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.