மிரட்டல் வழக்கை ரத்து செய்ய நடிகர் பாபி சிம்ஹா வழக்கு
மிரட்டல் வழக்கை ரத்து செய்ய நடிகர் பாபி சிம்ஹா வழக்கு
ADDED : மார் 09, 2024 09:37 AM
மதுரை : கொடைக்கானல் போலீசார் பதிவு செய்த மிரட்டல் வழக்கை ரத்து செய்யக்கோரியதில் புகார்தாரருடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் பாபி சிம்ஹா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
உசேன் என்பவர் கொடைக்கானல் போலீசில் அளித்த புகார்:நடிகர் பாபி சிம்ஹா எனது நண்பர். அவருக்கு சொந்தமான பிளாட் கொடைக்கானல் பேத்துப்பாறையில் உள்ளது. அதில் வீடு கட்ட எனது உறவினர் ஜமீரிடம் ஒப்பந்தம் செய்தார். 90 சதவீத பணி முடிந்து மீதி பணத்தை கேட்டபோது பாபி சிம்ஹா இழுத்தடித்தார். ரூ.10 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை தர மறுக்கிறார்.
பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப்.,பட வில்லன் நடிகர் ராமச்சந்திரா ராஜூ,' இதில் தலையிட்டால் கொலை செய்துவிடுவோம்,' என மிரட்டல் விடுத்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். பாபி சிம்ஹா, ராமச்சந்திரா ராஜூ மீது 2023 செப்.,13 ல் வழக்கு பதியப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி பாபி சிம்ஹா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
போலீசார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணை நிலுவையில் உள்ளது. புகாரை வாபஸ் பெறுவதாக உசேன் ஒப்புக் கொண்டுள்ளார். வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர், புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: இருதரப்பு சமரசத்திற்கான ஆவணத்தை மார்ச் 26 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

