நடிகை த்ரிஷா பற்றி அவதுாறு நடிகர் கருணாஸ் போலீசில் புகார்
நடிகை த்ரிஷா பற்றி அவதுாறு நடிகர் கருணாஸ் போலீசில் புகார்
ADDED : பிப் 22, 2024 02:55 AM

சென்னை,:'என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றியச் செயலர் ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகர் கருணாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் நடிகர் கருணாஸ். அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:
நான் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை நடத்தி வருகிறேன். முன்னாள்எம்.எல்.ஏ.,வான நான்நடிகராக உள்ளேன்;நடிகர் சங்க துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறேன்.
பிப்., 19ம் தேதி, சேலத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஏ.வி.ராஜு பேட்டி அளித்தபோது, என் மீது வன்மத்தை கக்கும் வகையில், அவதுாறாக மற்றும் அருவருப்பான உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துாரில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கி இருந்தபோது, அவர்களுக்கு நடிகைகளை ஏற்பாடு செய்தேன் என, கூறியுள்ளார்.
என்னையும், நடிகை த்ரிஷா பற்றியும், கீழ்த்தரமான எண்ணத்துடன், சில தகவல்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல்களை நீக்க வேண்டும்.
எவ்வித ஆதாரமும் இன்றி தகவல்களை வெளியிட்டு, சமூகத்தில் என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திய ராஜு மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் கருணாஸ் மற்றும் நடிகையர் குறித்து அவதுாறு பரப்பிய, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலர் ஏ.வி.ராஜுவுக்கு, அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாசலம் சார்பில், நேற்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் எனஎச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.