போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு; நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு; நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
ADDED : டிச 05, 2024 04:26 AM

சென்னை : போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வோருடன், தொடர்பில் இருந்ததுடன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய, நடிகர் மன்சூர் அலிகானின் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஜெ.ஜெ நகர், இ.பி பூங்கா அருகே, கடந்த நவ., 3ம் தேதி இரவு, போதைப்பொருள் விற்பனைக்காக வந்த, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 21, என்கிற கல்லுாரி மாணவனை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் இருந்து 17, 'எல்.எஸ்.டி ஸ்டாம்ப்' போதைப்பொருள், மூன்று கிராம் ஓ.ஜி கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஆன்லைன்' செயலி வழியே, போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதோடு, அதிக விலைக்கு விற்றதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 94 'எல்.எஸ்.டி ஸ்டாம்ப்'; 48 'எம்.டி.எம்.ஏ' போதை மாத்திரை; 700 கிராம் ஓ.ஜி கஞ்சா; கஞ்சா ஆயில்; ஐந்து மொபைல் போன், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் காலை, நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக், 26; புதுப்பேட்டையைச் சேர்ந்த யோகேஷ், 26; பாசில் அகமது, 26; முகமது ரியாஸ், 22; சையது ஜாகி, 22; நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமரன், 26; மேலக்கோட்டையூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 26 ஆகியோரை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அலிகான் துக்ளக், ஏற்கனவே கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், ஜிடான் ஆகியோரிடம் இருந்து, ஓ.ஜி கஞ்சா, மெத்தம் பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை, வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. பணப் பரிவர்த்தனை, மொபைல் போன் 'வாட்ஸாப்' உரையாடல்களை, போலீசார் ஆய்வு செய்தனர்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஏழு பேரையும் கைது செய்த போலீசார், அம்பத்துார் நீதிமன்றத்தில், நீதிபதி பரம்வீர் சிங் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை டிச., 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். பின், அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கைது செய்யபட்ட அரவிந்த் பாலாஜி, 20; வத்சல், 21; ஆருணி, 20 ஆகியோரை ஜெ.ஜெ நகர் போலீசார், 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
நேற்று மாலை மூவரும் விசாரணை முடிந்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். அடுத்து அலிகான் துக்ளக்கை, காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மகனுக்கு மன்சூர் 'அட்வைஸ்'
மன்சூர் அலிகான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, காவல் வாகனத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை பார்த்த மன்சூர் அலிகான்,''கஞ்சா அடிச்சா கவர்மென்ட் அரஸ்ட் பண்ணுவாங்க என்பது தெரியாதா? தெம்பா இரு, தைரியமா இரு, நல்ல புத்தகமாகப் படி,'' என, அறிவுரை கூறினார். பின்னர், ''பிக்பாஸ் வீட்டுக்கு போறதா நினைச்சுக்கோ ; கவர்மென்ட் சரக்கு குடிச்சா வழக்கு இல்லை; கஞ்சா அடிச்சா வழக்கு,'' என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.