இன்னொரு குத்து தாங்காது சாமி; துரைமுருகன் எனது நண்பர் என்று ஜகா வாங்கினார் நடிகர் ரஜினி!
இன்னொரு குத்து தாங்காது சாமி; துரைமுருகன் எனது நண்பர் என்று ஜகா வாங்கினார் நடிகர் ரஜினி!
UPDATED : ஆக 26, 2024 11:40 AM
ADDED : ஆக 26, 2024 10:55 AM

சென்னை: 'பல்லுப்போன மூத்த நடிகர்' என்று துரைமுருகன் கிண்டலுக்கு ஆளான நடிகர் ரஜினி, 'அமைச்சர் துரைமுருகன் எனது நண்பர், அவருடன் எனது நட்பு தொடரும்' என்று கூறி, ஜகா வாங்கினார்.
மூத்த அமைச்சர்களை வைத்து, தமிழக அரசை ஸ்டாலின் அரசு நடத்துவது பற்றி, 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில், நடிகர் ரஜினி கிண்டலாக பேசினார்.'ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் எளிதில் சமாளித்து விடலாம். பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி, ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கும் பழைய மாணவர்கள்' என்று ரஜினி பேசினார்.
துரைமுருகன் கிண்டல்
அதுவும் குறிப்பாக, 'அதிலும், துரைமுருகன் இருக்கிறார்; அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்' என்றெல்லாம், கிண்டலாகப் பேசினார் ரஜினி. அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் துரைமுகன், தன் பாணியில் ரஜினியை கிண்டல் செய்தார்.'மூத்த நடிகர்கள் பல்லுப்போய், வயசாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை' என்று கூறி விட்டார். துரைமுருகன் கிண்டல், இணையத்தில் வைரலாக பரவியது.
துரைமுருகன் நண்பர்
இது பற்றி இன்று நடிகர் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன சொன்னாலும் தப்பு கிடையாது. துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும்' என்று பதிலளித்து விட்டுச் சென்றார். மேலும், . கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என ரஜினி தெரிவித்தார்.
துரைமுருகன் பதில்
நடிகர் ரஜினி பதில் குறித்து, அமைச்சர் துரைமுருகன், 'நடிகர் ரஜினி பற்றி நகைச்சுவையாக பேசினேன். நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம்' என பதில் அளித்தார்.