ADDED : நவ 11, 2024 04:20 AM

சென்னை; நடிகர் டில்லி கணேஷ், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.
துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்தில், 1944ல் பிறந்தவர் டில்லிகணேஷ் 80.
இந்திய விமானப் படையில், 1964 முதல்- 1974 வரை, 10 ஆண்டுகள் பணியாற்றினார். கலைத்துறை மீதான ஈடுபாடு காரணமாக நாடகங்களில் நடித்து வந்தார். 1977ல், கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான, பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில், குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
குணச்சித்திரம்
'தட்சிண பாரத நாடகக் சபா' என்ற, புதுடில்லி நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால், 'டில்லி கணேஷ்' என்று அழைக்கப்பட்டார்.
நகைச்சுவை நடிகர் காத்தாடி ராமூர்த்தி நடத்திய நாடகங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என, பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். பசி, சிந்து பைரவி, சம்சாரம் அது மின்சாரம், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களில், இவரது கதாபாத்திரங்கள் முத்திரை பதித்தவை. 'டிவி' சீரியல் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர்கள் அஞ்சலி
சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகர் பிரதான சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் காலமானார்.
இவருக்கு தங்கம் என்ற மனைவி, மகா கணேஷ் என்ற மகன், பிச்சு, சாரதா என, இரு மகள்கள் உள்ளனர்.
டில்லி கணேஷ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அமைச்சர் சுப்பிரமணியன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், கார்த்தி, ராாதாரவி, செந்தில், சார்லி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும், 'டிவி' நடிகர், நடிகையர் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதி சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு, சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள, மாநகராட்சி மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
டில்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.வெ.க., தலைவர் விஜய், நடிகர் ரஜினி, அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.