கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 'வீடியோ காலில்' நடிகர் விஜய் ஆறுதல்
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 'வீடியோ காலில்' நடிகர் விஜய் ஆறுதல்
ADDED : அக் 08, 2025 05:49 AM

சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 'வீடியோ கால்' வாயிலாக, த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட, 41 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.
சம்பவம் நடந்தது தெரிய வந்ததும், விஜய் அங்கிருக்காமல் உடனடியாக தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.
அதேநேரத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா, 20 லட்சம் வழங்குவதாக விஜய் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில்
சென்று, விஜய் ஆறுதல் சொல்வார் என, கூறப்பட்டு வந்தது.
சம்பவம் நடந்து, 10 நாட்களுக்கு பின், பாதிக்கப்பட்ட குடும்பங்களை, மொபைல் போன் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது விஜய், 'சாரிம்மா... நடக்கக் கூடாதது நடந்துடுச்சிம்மா... விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று, அனைவரையும் வந்து சந்திக்கிறேன். இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும், என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்' என, கூறியுள்ளார்.