மக்களை சந்திக்காத நடிகர்கள் மாய தோற்றம் உருவாக்குகின்றனர் அ.தி.மு.க., முனுசாமி விமர்சனம்
மக்களை சந்திக்காத நடிகர்கள் மாய தோற்றம் உருவாக்குகின்றனர் அ.தி.மு.க., முனுசாமி விமர்சனம்
ADDED : நவ 08, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி: ''சினிமாவில் நடித்தவர்கள், மக்களை சந்திக்காமல், பெரிய கட்டமைப்பை உருவாக்கியது போல், மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்,'' என, விஜயை அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, மறைமுகமாக தாக்கி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பாக, பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., மறைந்தபோது அடுத்த தலைவர் ஜெயலலிதா என்பதை சொல்லாமல் சொல்லி சென்றார். பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயல ரான ஜெயலலிதாவுக்கு, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோரால் ஏராளமான சோதனைகள் வந்தன.
அதை கடந்து, 1.5 கோடி தொண்டர்கள் உள்ள கட்சியாக ஜெயலலிதா வளர்த்தார். அதேபோல, பழனிசாமிக்கும் ஏராளமான சோதனைகள் வருகின்றன.
தற்போது புதிய புதிய கட்சிகள் உருவாகி உள்ளன. ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி உள்ள அவர்கள், மக்களை சந்திப்பதில்லை. மக்களோடு நேரடியாக தொடர்பும் இல்லை.
சினிமாவில் ஏதோ நடித்தார்கள். அந்த சினிமாவை வைத்து கொண்டு, பெரிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளதுபோல, அவர்களை முதன்மைப்படுத்தி தேர்தலை சந்திக்கின்றனர்.
இதில், நாம் விழிப்போடு இருக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், வாக்காளர்களிடம், அ.தி.மு.க.,வின் சாதனைகளை எடுத்து கூறி, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் வேட்பாளராக விஜயை, த.வெ.க., அறிவித்ததோடு, தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி என கூறிய நிலையில், 'சினிமாவில் நடித்தவர்கள், மக்களை சந்திக்காமல், மாய தோற்றத்தை உருவாக்கு கின்றனர்' என, அ.தி .மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

