தீய சக்தி தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் புதுச்சேரியில் நடிகை குஷ்பு பேட்டி
தீய சக்தி தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் புதுச்சேரியில் நடிகை குஷ்பு பேட்டி
ADDED : மார் 23, 2026 10:39 PM

புதுச்சேரி: தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் உள்ளதால், தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என நடிகை குஷ்பு கூறினார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பா.ஜ., தமிழக துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் உடன் வந்தனர்.
அப்போது குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும். அத்தனை தொகுதிகளிலும் அவருக்கு வேட்பாளர் உள்ளார்களா என்பது சின்ன சந்தேகம் தான். என் வழியில் நான் தான் ராஜா என கூறிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், தி.மு.க.,வுக்கும் த.வெ.க.,விற்கும் தமிழகத்தில் போட்டி என விஜய் கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். முதல்வராக பழனிசாமி அமர்வார்.
தமிழகத்தில் தி.மு.க.,வை எதிர்த்து தான் பா.ஜ., போட்டியிடுகிறது. தி.மு.க., ஒரு தீய சக்தி.. தீயை ஒழிக்க வேண்டும். கடந்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் கிடைக்கிறது. அதனால் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் உள்ளது. 10 லட்சம் கோடி கடன் உள்ளது. எனவே, ஒரு மாற்றம் தேவை. மாற்றம் வந்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். பழனிசாமி முதல்வராக வந்தால் தான் தமிழகத்தில் நிறைய மாற்றங்களை பார்க்க முடியும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் பா.ஜ., ஆட்சியில் பங்கு கேட்குமா என்பதை கட்சி மேலிட பொறுப்பாளர்கள் முடிவு செய்வார்கள்.
புதுச்சேரியிலும், தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெறும். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணி ஆட்சியில் நல்ல வளர்ச்சி, பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது. பெண்களுக்காக பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

