ADDED : டிச 02, 2025 05:09 AM

கோவை: நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமோரு திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்தது.
அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர், சமந்தா, 38. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை, 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக, 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே, ஏற்கனவே விவாகரத்து பெற்ற, இயக்குநர் ராஜ் நிடிமோரு, 50, என்பவரை நடிகை சமந்தா காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின.
நேற்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, லிங்க பைரவி தேவி சன்னிதியில், இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என, 30 பேர் வரை பங்கேற்றனர்.

