தமிழர்களை கிண்டல் செய்து பதிவு மன்னிப்பு கேட்டார் நடிகை தன்யா
தமிழர்களை கிண்டல் செய்து பதிவு மன்னிப்பு கேட்டார் நடிகை தன்யா
ADDED : பிப் 03, 2024 12:42 AM

சென்னை:'தமிழர்களை பிச்சைக்காரர்கள்' என்று கிண்டல் செய்து, 12 ஆண்டுகளுக்கு முன் வலைதளத்தில் பதிவிட்டதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா.
தமிழில், ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. 12 ஆண்டுகளுக்கு முன் அவர், 'தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்தீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம். உங்களுக்கு வெட்கமே இல்லையா?' என்று தமிழர்களை கிண்டல் செய்து வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த விஷயம் அப்போது சர்ச்சையாகி, அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இவர், ரஜினி நடிப்பில், அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகும், லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரின் பழைய கருத்து இப்போது பிரச்னையாகி உள்ளது.
தமிழர்களை இழிவுபடுத்திய தன்யா, ரஜினி படத்தில் நடித்ததற்குஎதிர்ப்பு கிளம்பியது. பலரும் தன்யாவுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இந்த படத்தை வெளியிடவும் தடை கோரி புகார் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்யா வெளியிட்ட அறிக்கை :
நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்; அந்த கருத்து நான் கூறியது அல்ல. 12 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. ஒரு, 'ட்ரோல்' செய்யும் நபரால் அது உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. நான் அதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க, போதியஆதாரங்கள் இன்றிதவிக்கிறேன்.
என் சினிமா பயணம் துவங்கியது தமிழில் தான். அதற்காக நான் என்றும் நன்றிக்கடன்பட்டுஉள்ளேன்.
விளையாட்டுக்கு கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல கனவிலும் நினைக்க மாட்டேன். சர்ச்சைக்குரிய அந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிருஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. நான் தமிழ் மக்களிடம் மன்னிப்புகேட்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

