மாற்றுத்திறனாளி மணப்பெண்களுக்கு அதானி குழுமம் நிதி
மாற்றுத்திறனாளி மணப்பெண்களுக்கு அதானி குழுமம் நிதி
ADDED : பிப் 06, 2025 02:46 AM
சென்னை:உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் பிரபல தொழில் அதிபருமான கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி - திவா ஷா திருமணம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இதை கொண்டாடும் விதமாக அதானி குடும்பம் புதிதாக திருமணமான மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உதவும் விதமாக 'மங்கள சேவை' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் வகுக்கப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு இரு தினங்களே உள்ள நிலையில் ஜீத் அதானி புதிதாக மணமுடித்த 21 மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மணமகன்களுக்கு நிதியுதவி அளித்து மங்கள சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.
இது குறித்து கவுதம் அதானி வெளியிட்ட அறிக்கையில், 'சேவை என்பது வழிபாடு; சேவையே பிரார்த்தனை; சேவையே கடவுள். புதிதாக திருமணமான 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் 'மங்கள சேவை'யை வழங்குவது என ஜீத் மற்றும் திவா உறுதியேற்று உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
ஜீத் அதானி 'அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ்' இயக்குனராக உள்ளார்.