ADDED : ஜூன் 13, 2026 02:24 AM

சென்னை; 'நீட்' இளநிலை மறு தேர்வுக்கு, மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கி, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுதும் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, மே, 3ம் தேதி நடந்தது.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய இத்தேர்வை, நாடு முழுதும், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுதினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், தேர்விற்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மறுதேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வை, பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, என்.டி.ஏ.,வும், மத்திய கல்வி அமைச்சகமும் செய்து வருகின்றன. இந்நிலையில், 'நீட்' மறுதேர்வில் சில மாற்றங்களை, என்.டி.ஏ., செய்துள்ளது.
இது குறித்து, என்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:
வருகை பதிவேடுகளில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்றவை காரணமாக, தேர்வு எழுத நேரம் போதவில்லை என மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதை கவனத்தில் வைத்து, 'நீட்' தேர்வுக்கான கால அவகாசம், 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் இனி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடத்தப்படும்
நிர்வாக நடைமுறைகளால், தேர்வர்கள், தாங்கள் விடை எழுதும் நேரத்தை, இழக்காமல் இருப்பதையும், வினாத்தாளுக்கு பதில் அளிப்பதில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதையும், உறுதி செய்ய முடியும்.
தேர்வு வினாத்தாளில் ஏற்கனவே வழங்கப்பட்ட, 'ரப் பேஜ்' எனப்படும் கணக்கு செய்முறை மற்றும் குறிப்புகள் எழுதுவதற்கான பக்கங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன
வழக்கமாக இரண்டு பக்கங்கள் இருக்கும் நிலையில், தற்போது நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது-. தேர்வர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகள் மற்றும் தகவல் கையேடில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும். தேர்வு சுமுகமாக நடக்க, தேர்தல் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
