கூலிப்படை விவகாரத்தில் கூடுதல் கவனம் அவசியம்: திருமா அறிவுரை
கூலிப்படை விவகாரத்தில் கூடுதல் கவனம் அவசியம்: திருமா அறிவுரை
ADDED : டிச 22, 2024 01:58 AM
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
கவர்னர் ரவி சர்ச்சையை உருவாக்கக் கூடியவர். தமிழக அரசுக்கு தலைவலி கொடுக்க எண்ணி, ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காகவே மத்திய அரசு, தமிழகத்துக்கு அவரை அனுப்பி வைத்திருக்கிறது. ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டைப் போடுவதே கவர்னரின் இயல்பான போக்காகவே இருப்பதால், தொடர்ந்து தமிழகத்தில் அவரை அனுமதிக்கக்கூடாது. அதனால், மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யும் அளவுக்கான துணிச்சல், கூலிப்படையின் நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. இப்பிரச்னையில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
திருநெல்வேலி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதெல்லாம் சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் தான். அதனால், கூலிப்படையின் செயல்பாடுகளை ஒழிப்பதற்கு போலீசார் வியூகம் வகுத்து செயல்பட வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க, மத்திய பா.ஜ., அரசு தயாராக இல்லை. யு.ஜி.சி., 'நெட்' தேர்வை பொங்கல் பண்டிகை காலத்தில் வைப்பதன் வாயிலாக, தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கின்றனர். இதையெல்லாம் தமிழக மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.