அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி துணை மதிப்பீடு
அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி துணை மதிப்பீடு
ADDED : அக் 16, 2025 02:14 AM
சென்னை: நடப்பு 2025- - 26ம் நிதியாண்டுக்கான, 2,914 கோடி, 99 லட்சம் ரூபாய்க்கான துணை மதிப்பீடுகளை, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அவர் பேசியதாவது:
நடப்பு 2025- - 26ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள், 2,914 கோடி, 99 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க, 1,137 கோடி, 97 லட்சம் ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை போக்குவரத்து துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
'பெஞ்சல்' புயல் பாதிப்புக்காக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 2025 - -26ல் பெறப்பட்ட, 522 கோடி, 34 லட்சம் ரூபாயை, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றம் செய்ய, அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பழைய பஸ்களுக்கு பதிலாக, 3,000 புதிய பி.எஸ்., 6 வகை பஸ்கள் வாங்க, பங்கு மூலதன உதவியாக, 471 கோடி, 53 லட்சம் ரூபாய் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை போக்குவரத்துத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை, மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து செலவிடப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக கூடுதல் தொகை, 469 கோடி, 84 லட்சம் ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை, மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து செலவிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.