பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு:தமிழக அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி!
பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு:தமிழக அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி!
ADDED : ஜன 20, 2024 12:49 AM
சென்னை:அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து, தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகக் கட்டணம் வாங்கும் முறைகேடு, கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
மாநிலத்தில் அதிகளவில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தான், இந்த விதிமீறல் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதைப் பின்பற்றி, தனியார் பஸ்களிலும் அதே கட்டணத்தை வசூலிப்பது, தொடர்கதையாகவுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போதும், அரசு பஸ்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகக் கட்டணம் வசூலிக்கும் முறைகேடு நடந்தது.
சொகுசு பஸ், பாயின்ட் டூ பாயின்ட், பை பாஸ் ரைடர் என புதுப்புதுப் பெயர்களைச் சூட்டி, வழக்கமான கட்டணத்தை விட, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் குற்றம்சாட்டிய தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதே முறைகேட்டைத் தொடர்கிறது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறது.
ஆனால், அரசின் அனுமதியுடனே, இந்த முறைகேடு நடப்பதால், இதை எந்த அதிகாரிகளுமே கண்டு கொள்வதில்லை. இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, மாநிலம் முழுவதும் ஏராளமான நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, மாவட்டப் போக்குவரத்து அதிகாரியான கலெக்டர்களிடமும் நிறைய புகார்கள் தரப்பட்டுள்ளன. கலெக்டர் உத்தரவின்பேரில் இந்த பஸ்களுக்கு, போக்குவரத்துத்துறையினரால் ரூ.100, ரூ.200 என்று அபராதமும் விதிக்கப்படுகிறது. அதை 'டோல்கேட்'டுக்குக் கட்டணம் கட்டுவது போல கட்டிவிட்டு, அதே நாளிலேயே மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் உயரதிகாரிகள், தெரிந்தே இந்த முறைகேட்டைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 1645 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அத்தனை பஸ்களிலும், இன்று வரையிலும் கூடுதல் கட்டணமே தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது.
கட்டண முறைகேடு தொடர்வதால், கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
மனுவின் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், அரசு தரப்பில் இதுவரையிலும் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதியன்று, இந்த மனுவின் மீதான விசாரணை வந்தது. அப்போது வரையிலும் பதில் மனு தாக்கல் செய்யாததை கண்டித்துள்ள நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்., 23க்குத் தள்ளி வைத்துள்ளனர்.
அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, 'இந்த விவகாரத்தில் கட்டண முறைகேட்டைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், அதற்கு அபராதம் விதித்து, அதிலும் அரசு சம்பாதித்து வருகிறது' என்று தங்கள் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர்.
இதனால், இந்த வழக்கில் போக்குவரத்துத்துறை சார்பில், அடுத்த மாதத்தில் என்ன பதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதுஎன்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனாலும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணக் கொள்ளைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது சந்தேகம் தான்!