ADDED : ஆக 07, 2025 03:08 AM
சென்னை:மதுரையில் இருந்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு, கூடுதல் விமான சேவை வழங்க, இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் இருந்து, சென்னை, பெங்களூரு, டில்லி, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு, தினசரி அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்துக்கு இண்டிகோ நிறுவனம், தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. எனினும், ஒரு நாளைக்கு ஒரு விமான சேவை மட்டுமே உள்ளது. இவற்றை அதிகரித்து இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுரையில் இருந்து ஹைதராபாத்துக்கு, தினசரி இரண்டு விமானங்களை இயக்க, இண்டிகோ முடிவு செய்துள்ளது.
அதன்படி அக்., 26ம் தேதியில் இருந்து, இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஹைதராபாத்தில் இருந்து, காலை 6:45 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும். மதுரையில் இருந்து காலை 8:55 மணிக்கு புறப்படும் விமானம், காலை 10:30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். கூடுதல் விபரங்களை goindigo.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.