உயர கட்டுப்பாடு தளர்வால் கார் நிறுத்த கூடுதல் இடம்
உயர கட்டுப்பாடு தளர்வால் கார் நிறுத்த கூடுதல் இடம்
UPDATED : அக் 29, 2026 11:09 PM
ADDED : அக் 29, 2026 11:06 PM

சென்னை: ‘அடுக்குமாடி கட்டடங்களுக்கான, உயர வரம்பு தளர்த்தப்பட்டதால், அடித்தளத்தில் ஈரடுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என, கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அதிக உயரமில்லாத பிரிவில், அடுக்குமாடி கட்டடங்களின் உயரம், 60 அடியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ‘உயர வரம்பை மாற்ற வேண்டும்’ என, கட்டுமானத் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில், பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அதிக உயரமில்லாத பிரிவு அடுக்குமாடி கட்டடங்களின் உயர வரம்பு, 64 அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளத்தில், வாகனங்கள் நிறுத்த கூடுதல் இட வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில், தமிழக பிரிவு தலைவர் பி. மணிசங்கர் கூறியதாவது:
சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில், ஒரு அடுக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்காக, இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த தளம், 10 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இதன் உயரத்தை அதிகரித்தால், இயந்திர முறையில், ஈரடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கலாம்.
இந்நிலையில், உயர வரம்பு தளர்த்தப்பட்டதால், அடித்தளத்துக்கு, நான்கு அடி கூடுதலாக கிடைக்கும். ஒவ்வொரு தளத்துக்கும், அரை அடி குறைத்தால் அடித்தளத்தின் உயரத்தை, 16 அடியாக அமைக்கலாம். இதனால், ஒரு கார் நிறுத்துமிடத்தில், அடுக்கு முறையில், இரண்டு கார்கள் நிறுத்தும் வகையில், ‘ஹைட்ராலிக்’ முறையில் செயல்படும், இயந்திர வாகன நிறுத்துமிடம் திட்டத்தை செயல்படுத்த முடியும். அரசின் இந்த உத்தரவால், சிறிய அடுக்குமாடி கட்டடங்களில், வீடு விற்பனை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
