ரயிலில் தனியாக செல்லும் பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பு: ரயில்வே எஸ்.பி.,
ரயிலில் தனியாக செல்லும் பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பு: ரயில்வே எஸ்.பி.,
UPDATED : பிப் 09, 2025 04:48 AM
ADDED : பிப் 09, 2025 04:46 AM

சென்னை: ''ரயிலில் தனியாக செல்லும் பெண்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன் தெரிவித்தார்.
கோவையில் இருந்து திருப்பதி சென்ற, 'இன்டர்சிட்டி' ரயிலில், பெண்களுக்கான பெட்டியில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த பெண் பயணி. கடந்த 6ம் தேதி பயணித்தார். இந்த ரயில், வேலுார் மாவட்டம் குடியாத்தம் -- கே.வி.குப்பம் இடையே சென்ற போது, ஹேமராஜ், 30, என்ற வாலிபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோடு, அவரை ரயில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன் நேற்று, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
பெண் பயணியரிடம் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் தலா ஒரு பெண் காவலரும், ஆண் காவலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ரயிலில் பெண்களுக்கான பெட்டியில், பெண் பயணி தனியாக பயணிப்பதாக இருந்தால், அவசர உதவிக்கு, 1512, 99625 00500 ஆகிய எண்கள் வாயிலாக தகவல் கொடுக்கலாம்.
அந்த பயணியின் பாதுகாப்புக்காக, ஒரு பெண் காவலர் உடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெண் பயணியின் பாதுகாப்புக்காக, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே சார்பில், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படிப்படியாக இந்த பணிகள் முடியும் போது, பயணியருக்கான பாதுகாப்பு மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.