கூடுதலாக சேர்க்கப்பட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை
கூடுதலாக சேர்க்கப்பட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை
ADDED : நவ 26, 2025 02:19 AM

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கை உறுதி செய்வதற்கான பணிகள், விரைவில் துவங்க உள்ளன.
மாதந்தோறும் 1.15 கோடி மகளிருக்கு, அவர்களது வங்கிக் கணக்கில், 1,000 ரூபாய் செலுத்தும், மகளிர் உரிமைத் தொகை திட்டம், 2023 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சேர பயனாளிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டதால், ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, இத்திட்டத்தில் கூடுதல் மகளிரை சேர்க்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும், குறை தீர்ப்பு முகாம்கள் வாயிலாகவும், 35 லட்சத்திற்கும் அதிகமான மகளிரிடம் மனுக்கள் பெறப்பட்டன.
அவர்களில், வருமான வரி தாக்கல் செய்வோர் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து, விண்ணப்பித்த அனைவருக்கும், மகளிர் உரிமைத் தொகை டிச.,15ம் தேதி விடுவிக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
புதிய பயனாளிகளின் வங்கி கணக்கை சரிபார்க்க, விரைவில் அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி, சோதனை செய்யப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

