ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆர்வக்கோளாறு; பக்குவம் வேண்டும் என்கிறார் திருமா
ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆர்வக்கோளாறு; பக்குவம் வேண்டும் என்கிறார் திருமா
ADDED : டிச 15, 2024 10:28 PM

சென்னை: ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும், உடனே சாதிக்க வேண்டும் என்று துடிப்பதாகவும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: இடைநீக்கம் குறித்து ஆதவ் அர்ஜூனா சொன்ன கருத்து, கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் இருந்தது. அவருடைய விளக்கம் அவரின் பார்வையில் சரியாக இருந்தாலும், நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. கட்சிக்கு இணங்க வேண்டும். கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
அறிவே உன்னை வணங்குகிறேன், அறமே உன்னை வணங்குகிறேன், அமைப்பே உன்னை வணங்குகிறேன் என்பது தான் பவுத்தத்தில் உள்ள முக்கியமான முழக்கம். ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால், எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவராக இருந்தாலும், கட்சிக்கு கட்டுப்பட வேண்டும்.
ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ, கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோ நோக்கம் இல்லை. கட்சியின் நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பது தான் இடைநீக்கத்தின் நோக்கம். 2021 சட்டசபை தேர்தலில் இருந்து அவருடன் பழக்கம். அவர் கட்சியில் சேர்ந்து ஓராண்டாகிறது.
ஆர்வம் அதிகமாக இருக்கிறது. உடனே சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார். அவர் என்ன நினைத்தாலும், கட்சியின் தலைமையிடம் சொல்லி, கட்சியின் முடிவாக இருக்க வேண்டும். ஆனால், அவர் அமைப்பின் நடைமுறையை உள்வாங்கிக் கொள்ளவில்லை. பொது வாழ்க்கைக்குள் வர வேண்டும், விளிம்பு நிலை மக்கள் நலனுக்கு போராட வேண்டும் என்ற எண்ணங்களை வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது; பாங்கு, பக்குவம் அவசியம் எனக் கூறினார்.