அ.தி.மு.க., 400 கி.மீ.,: தி.மு.க., 781 கி.மீ.,: மழைநீர் வடிகால் கணக்கு சொல்கிறார் அமைச்சர்
அ.தி.மு.க., 400 கி.மீ.,: தி.மு.க., 781 கி.மீ.,: மழைநீர் வடிகால் கணக்கு சொல்கிறார் அமைச்சர்
UPDATED : அக் 16, 2024 09:49 PM
ADDED : அக் 16, 2024 05:56 PM

சென்னை: அ.தி.மு.க.,வின்10 ஆண்டு ஆட்சியில் 400 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடந்தது. ஆனால், தி.மு.க., 3 ஆண்டு ஆட்சியில் 781 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறினார்.
அவர் கூறியதாவது;சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது. 20 செ.மீ., மழை பெய்தாலும் அந்த நீர் வடிந்துவிட்டது. 990 மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 400 டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டன. 40 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு தங்கும் மக்களுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டது. 4.16 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அம்மா உணவகத்தில் இன்று 65 ஆயிரம் பேர் இலவசமாக உணவருந்தி உள்ளனர். அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி சிறப்பாக நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி 400 கி.மீ., மட்டும் நடந்தது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் 1135 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் 789 கி.மீ., டெண்டர் விடுப்பட்டு வேலை முடிந்துவிட்டது. மற்ற பகுதிகளிலும் வேலை நடக்கிறது. இதனால் தான் 4 மணிநேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது.
மழைநீர் வடிகால் பணி தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக நடக்கிறது. 10 ஆண்டுகளில் 400 கி.மீ., தூரம் தான் நடந்தது. ஆனால், மூன்று ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 789 கி.மீ., தூரம் பணிகள் நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக டெண்டர் விடப்பட்ட பணிகள் வேகமாக நடக்கிறது.மழைக்கட்டுப்பாட்டு மையம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஆரம்பித்ததோடு சரி. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது.
ஆங்காங்கே இருக்கும் குப்பை சேகரிப்பு தடுப்பு இருப்பதால் தடுப்பு காரணமாக மழை நீர் மெதுவாக வடிகிறது. வட சென்னை, புளியந்தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 2 அடி உயரம் தண்ணீர் நின்றது. கடந்த முறை அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. இந்த முறை மோட்டார் வைத்த நீர் வடித்து வருகிறோம். அதற்கு மாற்று திட்டம் தயாரித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.