அ.தி.முக., சின்னம் கொடியை பயன்படுத்த பன்னீர் செல்வத்துக்கு தடை: உயர்நீதிமன்றம்
அ.தி.முக., சின்னம் கொடியை பயன்படுத்த பன்னீர் செல்வத்துக்கு தடை: உயர்நீதிமன்றம்
ADDED : மார் 18, 2024 02:45 PM

சென்னை: அ.தி.முக., சின்னம் கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ்., பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும், விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில் இன்று(மார்ச் 18) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க., சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

