தூத்துக்குடியில் பள்ளி மாணவன் மீது ஜாதி ரீதியாக தாக்குதல்; திமுக அரசை விளாசிய இபிஎஸ்
தூத்துக்குடியில் பள்ளி மாணவன் மீது ஜாதி ரீதியாக தாக்குதல்; திமுக அரசை விளாசிய இபிஎஸ்
ADDED : பிப் 23, 2026 07:19 PM

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், பிப்19ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தான் சமூகநீதியா முதல்வர் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?
இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?பிரசார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது இனியாவது பேசுவாரா?
தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த முதல்வர்?
மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூக நீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக. இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

