தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெற்றி விழா பொதுக்கூட்டம் இங்கு தான் நடக்கும்; கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் அறிவிப்பு

வெற்றி விழா பொதுக்கூட்டம் இங்கு தான் நடக்கும்; கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் அறிவிப்பு

வெற்றி விழா பொதுக்கூட்டம் இங்கு தான் நடக்கும்; கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் அறிவிப்பு


ADDED : நவ 30, 2025 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 07:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவுடன், கோபிசெட்டிபாளையத்தில் தான் வெற்றி விழா நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக வருகை புரிந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது; இங்கு கூடியுள்ள கூட்டத்தின் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார் என்பதை உறுதி செய்துவிட்டீர்கள். யார் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அதில், கோபி தொகுதியில் அதிமுக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

முதன்மை தொகுதி


இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்க உங்களை அணுகினார். ஆனால், ராஜினாமா பண்ண உங்களைக் கேட்டாரா? ஆனால், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதிமுக ஆட்சி மலர்ந்த உடன் எடப்பாடி தொகுதிக்கு மேலாக கோபிச் செட்டிபாளையம் தொகுதி வளரும். தமிழகத்தில் முதன்மையான தொகுதியாக கோபி தொகுதி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

விவசாயிகள் நிறைந்தது இந்தத் தொகுதி. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாய மக்கள், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 50 ஆண்டு காலமாக போராடி வந்தனர். எனது தலைமையிலான ஆட்சியில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தேன். விவசாயிகள் மற்றும் மக்களைப் பற்றி ஸ்டாலின் மாடல் அரசுக்கு அக்கறையில்லை.

கையால் ஆகாத அரசு



இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இங்கு வந்தார். அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார். இந்தத் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை நாங்கள் செய்து கொடுத்தோம். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் வரையில் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தோம்.

அந்தத் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்து விட்டது. அதேபோல, பவானி சாகர் முதல் பவானி வரை 4 வழிச்சாலைக்கு அனுமதி பெற்று வைத்திருந்தோம். அதையும் நிறைவேற்ற வில்லை. எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாத, திறமையற்ற அரசின் முதல்வர் இங்கு வந்து பேசிவிட்டு சென்றுள்ளார்.

சொல்ல முடியுமா?




ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும். நீங்களும் வாங்க, நானும் வரேன். விவசாயப் பயிர்களின் பெயரை சரியாக சொல்விட்டால் நான் ஒப்புக் கொள்கிறேன். என்னப் பயிர், தானியம் என்று கூட தெரியாது. இப்பக் கூட நான் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களைப் போல சேலத்திற்கு வந்து, நமக்கு நாமே திட்டத்தில், கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரிட் ரோடு போட்டு, விவசாயத்தை பார்வையிடுகிறார். இப்படிபட்ட விவசாயியை எங்காவது பார்த்துள்ளீர்களா?

அண்மையில் டெல்டா மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நேரில் சென்று விவசாயிகளின் பாதிப்பை பார்வையிட்டேன். ஆனால், இங்குள்ள முதல்வர் சினிமா பார்க்கப் போகிறார். தலைமை செயலகத்தில் அழுகிய பயிர்களை முதல்வரிடம் காட்டுகிறார்கள். இப்படிபட்ட முதல்வரை இந்தியாவிலேயே நான் பார்த்ததில்லை.

அதிகார மையங்கள்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், சிறுமிகள், பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை. கொங்கு மண்டலத்தில் முதியோர்களை கொன்று கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் 4 அதிகார மையங்கள் இருக்கின்றன. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகியோர் ஆட்டிப்படைக்கின்றனர். அதனால், தான் சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட முடியவில்லை. திமுகவுக்கு ஜால்ரா போடும் டிஜிபி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் எது கிடைக்கிறதோ, இல்லையோ. போதை மருந்து கிடைக்கிறது. தங்கம், வெள்ளியைப் போல கொலை நிலவரம் பார்க்கின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் பெருமையாக பேசுகிறார். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் தான் 2026 சட்டசபை தேர்தல்.

படம் காரணமா?




கோபியில் இருக்கும் ஒருத்தரைப் (செங்கோட்டையன்) பற்றி சொல்லியே ஆக வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால், இந்தத் தொகுதி எம்எல்ஏ கலந்து கொள்ளவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்று அவர் சொன்னார். ஆனால், இப்போது, யார் படத்தை வைத்துக் கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள். உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக, பதவி கொடுத்தது அதிமுக.

இதே கோபியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை. கருணாநிதி, ஸ்டாலின் படத்தை வைத்த பேனருடன் அவர் (செங்கோட்டையன்) நிகழ்ச்சியில் பங்கேற்றார். எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை மதிக்கிறார்கள். நம்ம கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், கட்சி பொதுச்செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றால், இந்த மக்கள் மீது அக்கறை கொண்டவரா?

அவருக்குண்டான மரியாதை கொடுத்தோம். அவர் திருந்தியபாடில்லை. மனம் திறந்து பேசுவதாக சொல்லி தலைமைக்கு கெடு விதித்தார். அப்படிப்பட்டவரை எப்படி வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் பதவியை பறித்தோம். அப்போதாவது திருந்துவார் என்று நினைத்தோம். ஆனால் திருந்தியபாடில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் பசும்பொன் நினைவிடத்திற்கு செல்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?

வெற்றி விழா


2, 3 ஆண்டு காலமாக கட்சிக்குள் இருந்தே, கட்சிக்கு எதிராக செயல்பட்டார். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். இங்குள்ள ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். இவரைப் (செங்கோட்டையன்) போல சுயநலவாதி நானில்லை. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், கோபிச் செட்டிபாளையத்தில் தான் வெற்றி விழா கொண்டாடுவோம்.

இப்போது மாற்றுக் கட்சிக்கு சென்று இருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க. எந்தக் கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. இங்குள்ளவர்கள் கூட அடுத்த பொதுச்செயலாளராக வரலாம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்து இந்த 4 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி திமுக தலைமைக்கு போயிருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணியாளர்கள் நியமனத்தில் ரூ.800 கோடி ஊழல். இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் விடுவார்கள். மதுரையில் திமுக மேயர் ரூ.200 கோடி ஊழல். அதேபோல, திண்டுக்கல் மாநகராட்சியில் ஊழல், காஞ்சிபுரத்தில் பங்கு பிரிப்பதில் ஊழல். கோவை, நெல்லையிலும் பிரச்னை, இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us