அ.தி.மு.க., செயற்குழு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: இன்று பரபரப்பாக கூடுகிறது
அ.தி.மு.க., செயற்குழு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: இன்று பரபரப்பாக கூடுகிறது
ADDED : ஜூலை 29, 2011 11:05 PM

சென்னை: அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம் மற்றும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பரபரப்பாக கூடுகிறது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
தேர்தல் கமிஷன் விதிப்படி இந்த ஆண்டிற்கான செயற்குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என்பதாலும், ஆட்சி மன்றக்குழுவை திருத்தி அமைக்கப்பட்டதற்கு, செயற்குழுவில் ஒப்புதல் பெறுவதற்காகவும் இன்று மாலை 3.30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டத்திற்கு, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், செயற்குழு உறுப்பினர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, நில மோசடிக்கு தனிப்பிரிவு துவக்கியதற்கு நன்றி, குடும்பத்திற்கு 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நான்கு கிராம் தங்கம், படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், முதியோருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மீனவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து, அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் உள்ள மாகாணங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பொருளாதார மற்றும் தொழில் திட்டங்களை இணைந்து செயல்படுத்தலாம் என்றும், முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த ஹிலாரிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது. அரசு கேபிள் 'டிவி' திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், விவசாயிகளுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தும், நிலம் மற்றும் வீடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டும், சட்டரீதியான நடவடிக்கை அவர்கள் மீது எடுத்து வருவதற்கு பாராட்டும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் கூட்டம் துவங்குகிறது. வரும் 4ம் தேதி தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. அக்கூட்டத்தில், புதிய எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும். தொகுதி மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசிய பின், கூட்டம் முடிவடையும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.