அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை
ADDED : மார் 02, 2024 01:16 AM

தியாகதுருகம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மற்றும் அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடு உட்பட ஒன்பது இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 40; அ.தி.மு.க.,வில் மாநில ஜெ., பேரவை துணை அமைப்பாளராக உள்ளார். இவர், 2016 - 2021 வரை, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தார்.
இவரது தந்தை அய்யப்பா, 64; அ.தி.மு.க., ஒன்றிய செயலர். இவர், 2001 - 2006ம் ஆண்டுகள் வரை தியாகதுருகம் ஒன்றிய சேர்மனாக இருந்தார். பிரபுவின் தாய் தைலம்மாள், 60. இவர், 2006 முதல் 2011 வரை தியாகதுருகம் ஒன்றிய துணை சேர்மனாக பதவி வகித்தார்.
இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், அய்யப்பா, தைலம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் இவர்கள், 6.25 கோடி ரூபாய் வரை, முறைகேடாக சொத்து வாங்கி குவித்து இருப்பது தெரியவந்தது. அதற்கு, பிரபு உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையில், 43 போலீசார், ஒன்பது குழுக்களாக பிரிந்து, தியாகதுருகம் அருகே வடதொரசலுார் தாய் நகரில் உள்ள அய்யப்பா வீடு, பண்ணை வீடு மற்றும் உள்விளையாட்டு அரங்கம், அவரது மகன் பிரபுவின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேநேரத்தில், விழுப்புரம் பெரியகாலனி, ஜி.ஆர்.பி., தெருவில் உள்ள, பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை செய்தனர்.
கலையநல்லுாரில், அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் ராஜவேல், விருகாவூரில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலர் ஜான் பாஷா வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
பிரிதிவிமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் லியாகத் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோரின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் மற்றும் விழுப்புரம் என, ஒன்பது இடங்களில் நேற்று காலை 5:30 மணியளவில் துவங்கிய சோதனை, இரவு 8:30 மணி வரையிலும் தொடர்ந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

