நேற்று, இன்று, நாளை...! பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை! ஜெயக்குமார் திட்டவட்டம்
நேற்று, இன்று, நாளை...! பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை! ஜெயக்குமார் திட்டவட்டம்
ADDED : டிச 18, 2024 02:00 PM

சென்னை; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது;
தமிழகத்தில் தற்போது நிறைய பிரச்னைகள் உள்ளன. நீட் பயம், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது, அரசு ஊழியர்கள் போராட்டம் என ஒட்டுமொத்தமாக தெனாலி படம் போல பயம், பயம் என்று சொல்லிவிட்டு, ஸ்டாலின் பயமே உருவானவராக உள்ளார்.
யார் பயந்து போயிருக்கின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டால் உடனே கிடைக்கிறது. அவர்கள் பா.ஜ.,வின் செல்லக்குழந்தைகள்.
அம்பேத்கர் போற்றுதலுக்குரியவர், மாபெரும் தலைவர். அவர் போற்றப்பட வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்தக்கூடாது. அம்பேத்கரை யார் சிறுமைப்படுத்துகிறார்களோ அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். அந்த வகையில் அமித்ஷாவின் பேச்சு அக்கட்சிக்கு கடுமையான பின் விளைவுகள் ஏற்படுத்தும்.
பா.ஜ., அல்லாத கட்சிகள் யார், யார் எல்லாம் கூட்டணிக்கு வருவார்கள். எந்த கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வருவார்கள் என்பது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதற்கு காலம் இருக்கிறது.
ஆனால் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதை பற்றி பொதுச்செயலாளர் தெளிவுப்படுத்தி இருந்தார். நேற்று இல்லை, இன்றும் இல்லை நாளையும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை. இது குறித்து பலமுறை பொதுச் செயலாளர் கூறி விட்டார். ஒட்டு மொத்தமாக 2026 தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதை பல முறை பொதுச்செயலாளர், கட்சியின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தெளிவுபடுத்திவிட்டார்.
2026 தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு கூட வெற்றி பெறும். யார் காலில் விழவேண்டிய அவசியம் அ.தி.மு.க.,வுக்கு இல்லை. டி.டி.வி., தினகரன் போன்று பா.ஜ., காலில் அ.தி.மு.க.,விழ வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., தன்மானத்துடன் இயங்குகின்ற இயக்கம்.
கட்சியின் நிலைப்பாடு என்பது பொதுச் செயலாளரிடம் உள்ளது. அந்த நிலைப்பாடு தான் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.