அ.தி.மு.க., ஆட்சியில் அதிகார பகிர்வா: பொன்னையன் தகவல்
அ.தி.மு.க., ஆட்சியில் அதிகார பகிர்வா: பொன்னையன் தகவல்
ADDED : நவ 11, 2024 06:41 AM

ராணிப்பேட்டை : “ஆட்சியில் அதிகார பகிர்வு குறித்து, தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன் முடிவு செய்யப்படும்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., மன்ற செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் அளித்த பேட்டி:
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழிக்கு கவிதை எழுத தெரியுமே தவிர, அரசியல் தெரியாது. பொய் சொல்வதற்காகவே பிறந்தவர்கள் கருணாநிதியும், ஸ்டாலினும். உலகிலேயே அதிகம் பொய் பேசும் இயக்கம் தி.மு.க., தான். தமிழகத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்குள், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அ.தி.மு.க., கட்டமைக்கும். ஒத்த கருத்துள்ள கட்சிகளை கொண்டு கூட்டணி கட்டமைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அதிகார பகிர்வு அளிப்பது குறித்து, தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.