ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: நடிகர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி பதில்
ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: நடிகர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி பதில்
ADDED : ஆக 26, 2025 11:27 AM

குன்னத்தூர்: 'ஆந்திராவில் மிக பெரும் கூட்டத்தை கூட்டி கட்சி ஆரம்பித்த நடிகர் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார். ஆனால் இபிஎஸ் யார் என்றே தெரியாது என்ற நடிகர் விஜய் அரசியலில் என்ன செய்து விட முடியும்' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்து உள்ளார்.
மதுரையில் செப்.1ம் தேதி இபிஎஸ் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக குன்னத்தூரில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;
திமுக ஒரு முறை ஆட்சி அமைத்தால் மறுமுறை ஆட்சிக்கு வரமுடியாது. இந்த வரலாறு 2026ம் ஆண்டும் தொடரும். நிறைய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துள்ளனர். இப்போது கூட நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மதுரையில் அவர் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பீர்கள்.
யாரையும் நாங்கள் எப்போதும் குறை சொல்லி பேசமாட்டோம். அவரின் (நடிகர் விஜய்) படத்தை பார்த்து நாங்களும் ரசிக்கக்கூடியவர்கள் தான். ஆனால் அந்த மாநாட்டில் (தவெக மதுரை மாநாடு) அதிமுகவுக்கு இருக்கும் தலைவரை பார்த்தீர்களா? என்பது மாதிரி வார்த்தை வந்துவிட்டது.
எங்களுடைய தலைவர் இப்போது யார்? இபிஎஸ் தான். அவரை பார்த்து அதிமுகவுக்கு யார் தலைவர் என்றே தெரியாது என்று சொன்னால்... இதுக்கு மேல் யாராவது இருக்க முடியுமா? இப்படி எல்லாம் ஒருத்தர் (நடிகர் விஜய்) அரசியலுக்கு வந்து அவர் என்ன பண்ண முடியும்?
யார் வேண்டுமானாலும் அவரை (இபிஎஸ்) போய் பார்க்கலாம். அப்படிப்பட்ட தலைவர். ஆனால் நான் சிங்கம் எப்போதாவது ஒரு தடவை தான் வெளியே வருவேன் என்று நமது தலைவரை பற்றி பேசுகிறார்.
எங்கள் தலைவரை பற்றி பேசக்கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படிப்பட்டவரை பார்த்து இன்றைக்கு ஒரு நடிகர் இப்படி பேசுகிறார். இதை விட பெரிய கூட்டத்தை எல்லாம் பார்த்தீர்கள் என்றால்.. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் கூட்டத்தை பாருங்கள். இப்போது கட்சியே இல்லாமல் கலைத்து விட்டு போய்விட்டனர்.
சாதாரண கட்சிக்கு தலைவராக இபிஎஸ் இல்லை. 53 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி. 2026ல் இபிஎஸ் தான் முதல்வர் என்பது உறுதி. விஜய் மட்டுமல்ல, யாரும் இதை தடுக்க முடியாது.
இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.