மயானங்களை தனியாரிடம் விட அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு
மயானங்களை தனியாரிடம் விட அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு
ADDED : செப் 29, 2024 06:31 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து, நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் அமைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது.
ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு; மயான பூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது என்பது, மக்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை.
ஏற்கனவே 100 சதவீதம் மின் கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.
அடுத்து, ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன் வழியே குடிநீர் வரி, கழிவுநீர் அகற்றல் வரி என, அனைத்து வரிகளும் தானாகவே உயர்த்தப்படும். இத்துடன், குப்பை அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது; இது கண்டனத்துக்குரியது.
அதேபோல், மயானத்தை வியாபார நோக்கில் தனியார்மயமாக்குவதை, அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்.
சென்னை மாநகராட்சியில் தற்போது பணிபுரியும் பெரும்பாலான துாய்மைப் பணியாளர்கள், கடந்த 2007 - 08ம் ஆண்டுகளில், அப்போதைய தி.மு.க., ஆட்சியில், தனியார் நிறுவனங்கள் வழியே ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்பட்டனர்.
தற்போது, துாய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை, வேறொரு நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைக்க உள்ளதாகவும், அந்நிறுவனம், நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் துாய்மைப் பணியாளர்களை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில், அண்டை மாநிலம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து, ஆட்களை நியமிக்க உள்ளது.
இதை எதிர்த்து துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அவர்களின் பணிப் பாதுகாப்பை, தி.மு.க., அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தி உள்ளார்.