ADDED : ஜன 03, 2024 07:33 AM

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று, அ.தி.மு.க., பொதுக் குழுவில் மீண்டும் திட்டவட்டமாக பழனிசாமி அறிவித்து விட்டார். நடக்க இருப்பது லோக்சபா தேர்தல். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டுமா, கூடாதா என்பதை முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டியிடுகின்றன.
மோடியை எதிர்க்கும், 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வின் நிலையை இன்னும் பழனிசாமி விளக்கவில்லை.
'பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்ததால் தான், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என, அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏற்கனவே பேசியதுதான், கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் தெரிகிறது.
மத்தியில் இருக்கும் பா.ஜ., அரசு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அப்படி என்ன செய்து விட்டது என்பதை, பழனிசாமி விளக்க வேண்டும். கணிசமான அளவில், முஸ்லிம்கள் இருக்கும் உத்தர பிரதேசத்தில், இரண்டாவது முறையாக பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
சிறுபான்மையினருக்கு பெரிய ஆபத்து வந்து விட்டது போல, எல்லா கூட்டத்திலும், 'உங்களுக்கு அரணாக அ.தி.மு.க., இருக்கும்' என்று பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது. கட்சிக்காரர்கள் மட்டும் ஓட்டளித்து எந்த வேட்பாளர்களும் வெற்றி பெறுவதில்லை; பொது மக்களும் ஓட்டளிக்க வேண்டும்.
அப்படித்தான் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பெற்று, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்தார். அவர் இருந்த வரை, 13 ஆண்டுகள் தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தி.மு.க., போல, அ.தி.மு.க., இனவாதம், பிரிவினை வாதம் மற்றும் ஹிந்து மத எதிர்ப்பு பிரசாரம் செய்யாவிட்டாலும், அப்படி பிரசாரம் செய்யும் எந்த அமைப்பையும் கண்டித்து அறிக்கை விட்டதில்லை.
பா.ஜ.,வின் தமிழக தலைவராக அண்ணாமலை வந்த பின், படித்தவர்கள், இளைஞர்கள், ஊழலற்ற ஆட்சியை விரும்பும் மக்கள், அவரின் பக்கம் வர துவங்கி விட்டனர். தமிழகத்தில், சத்தமின்றி ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, கிடைக்க வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு, கட்சி சார்பற்ற நடுநிலையான மக்களின் ஓட்டுகளை இழக்கப் போகிறது, அ.தி.மு.க., என்பது தான் உண்மை.