முதல்வர் உத்தரவால் விமோசனம் : 35 ஆண்டுகளுக்குப்பின் நெல்லையப்பர் கோயில் வெள்ளித்தேர் தயாரானது
முதல்வர் உத்தரவால் விமோசனம் : 35 ஆண்டுகளுக்குப்பின் நெல்லையப்பர் கோயில் வெள்ளித்தேர் தயாரானது
UPDATED : ஜன 03, 2026 06:38 PM
ADDED : ஜன 03, 2026 04:08 PM

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம், டவுனில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் - அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி இந்த தேர் தயாரானது. சபாநாயகர் அப்பாவு, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில், நடந்தது. மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார், தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
3,967 குடமுழுக்கு
தமிழ்நாட்டில் இதுவரை 3,967 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் மட்டுமே இருந்த பெருந்திட்ட வரைவு திட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
₹400 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக் கிடந்த ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளித் தேர் உலாவே சாட்சி
நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித் தேர் அமைப்பதற்கு உபயதாரர் இல்லாத நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இருந்து உபயதாரர்கள் அழைக்கப்பட்டு தேர் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி 425 கிலோ எடையில் வெள்ளித்தேர் தயாரானது. சொல்வதை செய்கிற அரசு என்பதற்கு நெல்லையப்பர் கோவிலின் வெள்ளித் தேர் உலாவே சாட்சியாக உள்ளது.
இவ்வளவு பணிகளை செய்து வரும் திராவிட மாடல் அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என சிலர் பிம்பம் உருவாக்க முயல்கிறார்கள். அந்த பிம்பம் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது. திராவிட மாடல் அரசு மக்களை மட்டுமல்ல, கடவுளையும் 'லிப்டிங்' செய்யும் அரசு என்றார்.
சாலையை விட பள்ளத்தில் இருந்த 25 கோவில்கள் கண்டறியப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் 14 கோவில்கள் லிப்டிங் செய்யப்பட்டுள்ளன. மேலும் 15-வது கோவிலின் லிப்டிங் பணி நடைபெற்று வருகிறது. அந்த கோவிலின் கோபுரத்தையும் லிப்டிங் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
நெல்லையப்பர் கோவிலுக்கு யானை கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

